செய்திகள்

பசு பாதுகாவலர்களை கண்காணிப்பது மாநிலங்களின் பொறுப்பு - சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

Published On 2018-07-03 12:29 GMT   |   Update On 2018-07-03 12:29 GMT
பசு பாதுகாவலர்கள் என்ற போர்வையில் வன்முறையில் ஈடுபடுவோரை மாநில அரசுகளே கண்காணிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. #CowVigilantism #SC
புதுடெல்லி:

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் தாக்குதல் சம்பவம் அரங்கேறியது.  இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுத்த நிறுத்த அரசுகளுக்கு உத்தரவிடுமாறு மகாத்மா காந்தியின் கொள்ளு பேரனான பத்திரிக்கையாளர் தூஷார் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க மாவட்டம் தோறும் உயரதிகாரிகளை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து கண்காணிக்குமாறு உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநில அரசுகள் பின்பற்றவில்லை.

இந்நிலையில், மாநில அரசுகள் கண்காணிக்கவில்லை என தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம் கன்வில்கார் மற்றும் டி.ஒய் சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் யாரும் சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும், இந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கண்காணிப்பது ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்பாகும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து, பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளை தடுக்க வழிமுறையை உருவாக்க கோரிய வழக்குகளின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்துள்ளது.

இதற்கிடையே முந்தைய உத்தரவை பின்பற்றாத ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்னெடுக்க கோரிய வழக்கில் அம்மாநிலங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CowVigilantism #SC
Tags:    

Similar News