செய்திகள்

மேல்-சபை துணை தலைவர் பதவி - அகாலி தளத்துக்கு ஒதுக்க பாஜக முடிவு

Published On 2018-07-02 06:49 GMT   |   Update On 2018-07-02 06:49 GMT
பாராளுமன்ற மேல்-சபை துணைத் தலைவர் தேர்தல் பதவியை கூட்டணி கட்சியான அகாலிதளத்துக்கு ஒதுக்க பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. #BJP #AkaliDal
புதுடெல்லி:

பாராளுமன்ற மேல்-சபை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியனின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய துணை தலைவரை தேர்வு செய்ய வேண்டியதுள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விரைவில் வெளியிட உள்ளார்.

மேல்-சபை துணை தலைவரை மேல்-சபையில் உள்ள எம்.பி.க்கள் ஓட்டுபோட்டு தேர்வு செய்வார்கள். 113 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால்தான் துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற முடியும். மேல்-சபையில் பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் அந்த அளவுக்கு எம்.பி.க்கள் இல்லை.

எனவே மாநில கட்சிகளின் எம்.பி.க்கள் ஆதரவை பெறுபவர்தான் துணை தலைவர் தேர்தலில் வெற்றி பெற முடியும். ஏற்கனவே இந்த பதவியை வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, அதை பா.ஜ.க.வுக்கு விட்டு கொடுத்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது.

அந்த எண்ணத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் துணை தலைவராக ஆதரவு கொடுப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனால் மேல்-சபை துணைத் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே பா.ஜ.க.வும் மேல்-சபை துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால் பா.ஜ.க. தன் சார்பில் வேட்பாளரை நிறுத்தாமல் கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு அந்த பதவியை விட்டுக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் மேல்-சபை துணைத் தலைவர் பதவியை அகாலிதளம் கட்சிக்கு பா.ஜ.க. விட்டு கொடுக்கும் என்று தெரியவந்துள்ளது. அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நரேஷ்குஜ்ரால் துணைத் தலவர் பதவிக்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. #BJP #AkaliDal
Tags:    

Similar News