செய்திகள்

தெலுங்கு தேசம் எம்.பி.யின் 11 நாள் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் சந்திரபாபு நாயுடு

Published On 2018-06-30 09:40 GMT   |   Update On 2018-06-30 09:40 GMT
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையை அமைத்துத் தரக்கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி ரமேஷ் உண்ணாவிரதத்தை சந்திரபாபு நாயுடு இன்று முடித்து வைத்தார். #AndhraPradesh #TDP #Ramesh
ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை பிரித்தபோது ஆந்திராவுக்கு என சில வாக்குறுதிகளை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்து இருந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ஒருங்கிணைக்கப்பட்ட இரும்பு ஆலை போன்ற பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், எந்த வாக்குறுதியையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு தெலுங்கு தேசம் கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த இரும்பு ஆலையை அமைத்து தரக்கோரி, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி ரமேஷ் கடப்பா மாவட்டத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே, அவரது உண்ணாவிரதம் இன்று 11-வது நாளாக நீடித்தது. இதனால் ரமேஷின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கடப்பா மாவட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் எம்.பி. ரமேஷை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு இன்று பிறபகல் சந்தித்தார். அவரது வலியுறுத்தலின் பேரில் எம்.பி. ரமேஷ் உண்ணாவிரதத்தை கைவிட்டார். அவருக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.
#AndhraPradesh #TDP #Ramesh
Tags:    

Similar News