செய்திகள்

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிய தடை - ராஜஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை

Published On 2018-06-28 05:38 GMT   |   Update On 2018-06-28 05:38 GMT
ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அந்த ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து பணிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. #RajasthanGovernment #DressCode
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

அந்த மாநிலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிவதற்கு தடை விதித்து மாநில உயர் கல்வி துறை உத்தரவிட்டு இருந்தது.

இதை கண்டித்து மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த உத்தரவை வாபஸ் பெறக் கோரி அவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அந்த ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து பணிக்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.



ராஜஸ்தான் மாநில தொழிலாளர் நலத்துறை இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக அந்த துறையின் ஆணையர் கிரிராஜ் சிங் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தொழிலாளர் நலத்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள், ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் இதர அநாகரீகமான, கண்ணியக் குறைவான ஆடைகளை அணிந்து அலுவலகத்துக்கு வருகிறார்கள். பணிக்கு வரும் போது இது போன்ற உடைகளை அணிவதை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும். நாகரீகமான, கண்ணியமான உடைகளை அணிந்து ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் அரசின் இந்த உத்தரவுக்கு மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் கூறும் போது, ‘‘ஜீன்ஸ், டி-சர்ட் ஆகிய உடைகள் அநாகரீகமானவை என்று எப்படி கூற முடியும்? இது போன்று கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசு பணியாளர்களுக்கான விதிகளில் இடமில்லை. இந்த நடவடிக்கையை நாங்கள் ஜனநாயக முறையில் எதிர்ப்போம்’’ என்று தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ்.சித்தாந்தத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஒவ்வொருவர் மீதும் திணிக்க பா.ஜனதா அரசு முயற்சிக்கிறது என்று குற்றச்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் பா.ஜனதா அரசின் முடிவை நியாயப்படுத்தி உள்ளது. #RajasthanGovernment #DressCode

Tags:    

Similar News