செய்திகள்

அணிவகுப்பின் போது மயக்கம்: விமானப்படை வீரரிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி

Published On 2018-06-25 20:30 GMT   |   Update On 2018-06-25 20:30 GMT
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அணிவகுப்பு வரவேற்பு நிகழ்ச்சியின் போது மயக்கம் அடைந்த விமானப்படை வீரரிடம் சென்று பிரதமர் மோடி நலம் விசாரித்த நிகழ்வு வீரர்கள் மற்றும் அதிகாரிகளை நெகிழச்செய்தது. #Modi #TakeCare #Ceremony
புதுடெல்லி:

செஷல்ஸ் நாட்டு அதிபர் டேனி பார் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.



இந்த அணிவகுப்பின் போது, அதில் கலந்து கொண்ட விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்தார். கடும் வெயில் காரணமாக மயங்கி விழுந்த அவரை, சக வீரர்கள் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து சென்றனர்.

பின்னர் வரவேற்பு நிகழ்வுகள் அனைத்தும் முடிந்ததும் செஷல்ஸ் அதிபர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் அங்கிருந்து சென்றனர். ஆனால் பிரதமர் மோடி, மயக்கம் அடைந்த அந்த வீரரின் அருகே நடந்து சென்று, அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

சில நிமிடங்கள் அங்கு நின்ற அவர், வீரரிடம் ‘உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று பரிவாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். பிரதமர் மோடியின் இந்த செயல், அங்கிருந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகளை நெகிழச்செய்தது.  #Modi #TakeCare #Ceremony
Tags:    

Similar News