செய்திகள்

மும்பை ஓட்டல் அதிபரை மிரட்டிய தாவூத் இப்ராகிமின் கூட்டாளி கைது

Published On 2018-06-23 15:34 GMT   |   Update On 2018-06-23 15:34 GMT
மும்பையில் ஓட்டல் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான ராம்தாஸ் ரகானே காவல்துறையால் கைது செய்யப்பட்டார். #DawoodIbrahim
மும்பை:

மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட தாவூத் இப்ராகிம் சகல வசதிகளுடன் துபாய் நகரில் வாழ்ந்து வருகிறார். தாவூத் இப்ராகிமின் அடியாட்கள் இந்தியாவில் பிரபல சினிமா நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் ஆகியோரை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, சர்வதேச அளவில் கிரிக்கெட் சூதாட்ட வளையத்தையும் நிர்வகித்து வரும் தாவூத் இப்ராகிமுக்கு இந்தியாவில் உள்ள அவரது அடியாட்கள், வசூலித்து வரும் மாமூலில் இருந்து பெரும்தொகை தாவூத் இப்ராகிமின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், மும்பையில் உள்ள பிரபல ஓட்டல் அதிபரிடம் தாவூத் இப்ராகிமின் அடியாட்கள் தொலைப்பேசி மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தனர். தங்களது குழுவைச் சேர்ந்த ராம்தாஸ் ரகானே என்பவனிடம் 50 லட்சம் ரூபாய் மாமூலாக தர வேண்டும் இல்லாவிட்டால் உன்னை கொன்றுவிடுவோம் என்று எதிர்முனையில் பேசியவர்கள் மிரட்டியுள்ளனர்.
 
மேலும், உடனடியாக ராம்தாஸ் ரகானேவிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்தனுப்புமாறும் வற்புறுத்தினர். இந்த மிரட்டல் தொடர்பாக அந்த ஓட்டல் அதிபர் மும்பை நகர போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து கண்காணித்து வந்த மும்பை நகர குற்றப்பிரிவு துணை கமிஷனர் திலீப் சாவந்த், ராம்தாஸ் ரகானேவை இன்று கைது செய்தார்.

பாகிஸ்தானில் இருக்கும் தாவூத் இப்ராகிமின் கூட்டாளிகள் அறுவுறுத்தியபடி இந்த மிரட்டலை இங்குள்ள தாதாக்கள் அந்த ஓட்டல் அதிபருக்கு அனுப்பி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பணம் கொடுக்காத ஓட்டல் முதலாளி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட போது ராம்தாஸ் ரகானேவை கைது செய்த போலீசார் அகமதுநகர் மாவட்டம், சங்கம்நெர் பகுதியில் உள்ள அவனது வீட்டில் நடத்திய சோதனையில் கைத்துப்பாக்கியும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் குறிப்பிட்டனர்.

கைதான ரகானே மீது மும்பை குஜராத் பகுதியில் ஏரளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், கடந்த 2011-ம் ஆண்டு மும்பை பகுதியில் பிரபல கட்டுமான நிறுவன அதிபர் மனிஷ் தோலாக்கியா மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திலும் இவன் தொடர்புடையவன் என்பதும் தெரியவந்துள்ளது.

இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரகானேவை வரும் 30-ம் தேதி வரை போலீசார் காவலில் எடுத்துவிசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DawoodIbrahim
Tags:    

Similar News