செய்திகள்

தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக மகன்கள் மீது அர்ஜூன் சிங் மனைவி வழக்கு

Published On 2018-06-19 23:34 GMT   |   Update On 2018-06-19 23:34 GMT
தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாக மகன்கள் மீது மறைந்த மத்திய மந்திரி அர்ஜூன் சிங் மனைவி சரோஜ் குமாரி கோர்ட்டில் வழக்கு தொடுத்து உள்ளார். #ArjunSingh #SarojKumari
போபால்:

மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தவர் மறைந்த அர்ஜூன் சிங். இவரது மனைவி சரோஜ் குமாரி (வயது 87). இவருக்கு மத்திய பிரதேச சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங் மற்றும் அபிமன்யு சிங் என 2 மகன்கள்.

இவர்கள் மீது போபால் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், சரோஜ் குமாரி ஒரு வழக்கு தொடுத்து உள்ளார்.



அதில் அவர் தன்னை தனது மகன்கள் வீட்டை விட்டு துரத்தி விட்டதாக வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்.

வயதான நிலையிலும் தனது மகள் வீணா சிங், வெளிநாடு வாழ் தொழில் அதிபர் சாம் வர்மா ஆகியோருடன் கோர்ட்டுக்கு வந்து இந்த வழக்கை சரோஜ் குமாரி தாக்கல் செய்து உள்ளார்.

வழக்கில் அவர், “எனது மகன்கள் அபிமன்யு சிங், அஜய் சிங் ஆகியோர் என்னை என் சொந்த வீட்டில் இருந்து துரத்தி விட்டனர். என்னை பராமரிக்கவும் மறுத்து விட்டனர். எனவேதான் கோர்ட்டின் உதவியை நாடி உள்ளேன்” என்று கூறி உள்ளார்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற மாஜிஸ்திரேட்டு, இது குறித்து பதில் அளிக்க அஜய் சிங்குக்கும், அபிமன்யு சிங்குக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, அடுத்த மாதம் 19-ந் தேதிக்கு ஒத்தி போடப்பட்டு உள்ளது. #ArjunSingh #SarojKumari  #tamilnews
Tags:    

Similar News