செய்திகள்

கர்நாடக முதல்-மந்திரிக்கு எதிராக முகநூலில் கருத்து தெரிவித்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

Published On 2018-06-19 23:15 GMT   |   Update On 2018-06-19 23:15 GMT
கர்நாடக முதல்-மந்திரிக்கு எதிராக முகநூலில் கருத்து தெரிவித்த போலீஸ்காரர் அருண் டோலினை மாநகர போலீஸ் கமிஷனர் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். #Kumaraswamy #Constable #Suspended
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக குமாரசாமி கூறியிருந்தார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார் என விவசாய சங்கத்தினரும், பா.ஜனதாவினரும் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும், அருண் டோலின் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் முதல்-மந்திரிக்கு எதிராக கருத்து தெரிவித்து இருந்தார். விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வது எப்போது? என அவர் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த தார்வார்-உப்பள்ளி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.நாகராஜூ, அருண் டோலினை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதுதொடர்பாக விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அருண் டோலின் இதற்கு முன்பும் இதுபோல் குமாரசாமி அரசை விமர்சித்து முகநூலில் சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  #Kumaraswamy #Constable #Suspended
Tags:    

Similar News