செய்திகள்

பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி பேரணி - டெல்லியில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன

Published On 2018-06-17 10:34 GMT   |   Update On 2018-06-17 10:34 GMT
டெல்லி கவர்னர் அலுவகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கை தொடர்பாக பேரணிக்கு அழைப்பு விடுத்ததால் டெல்லியில் 5 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. #5metrostationsshut #AAPmarch #PMresidence
புதுடெல்லி:

டெல்லி கவர்னர் அலுவலகத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 டெல்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இவ்விவகாரத்தில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரது இல்லம் நோக்கி இன்று மாலை 4 மணியளவில் பேரணியாக புறப்பட்டு செல்வோம் என ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா உள்ளிட்ட மந்திரிகள், ஆம் ஆத்மி பிரமுகர்கள், தொண்டர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் எனவும் அறிவிப்பு வெளியானது. அனுமதி இல்லாமல் இந்த பேரணி நடைபெறவுள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் மாதுர் வர்மா குறிப்பிட்டார்.

இந்த பேரணிக்கு போலீஸ் அனுமதி பெறப்படாத நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

போலீசாரின் அறிவுரைப்படி பகல் 12 மணியளவில் டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரெயில் நிலையத்தின் இரு வாயில்களும் அடைக்கப்பட்டன.

இதேபோல், பிற்பகல் சுமார் 2 மணியளவில் பட்டேல் சவுக், மத்திய தலைமை செயலகம், உத்யோக் பவன் மற்றும் ஜன்பத் ஆகிய ரெயில் நிலையங்களின் இரு வாயில்களும் அடைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் மண்டி ஹவுஸ் பகுதியில் இருந்து பேரணி புறப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது. #5metrostationsshut #AAPmarch #PMresidence
Tags:    

Similar News