செய்திகள்

முதல் மந்திரி பதவியின் கண்ணியத்தை தாழ்த்தி விட்டார் - கெஜ்ரிவால் மீது ஷீலா தீட்சித் பாய்ச்சல்

Published On 2018-06-15 12:22 GMT   |   Update On 2018-06-15 12:22 GMT
கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணா செய்வதன் மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார் என முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் குறிப்பிட்டுள்ளார். #Kejriwal #SheilaDikshit
புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலை கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணா செய்வதன் மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார் என முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் குறிப்பிட்டுள்ளார்.

1998 முதல் 2013 வரை டெல்லி முதல் மந்திரியாக பதவி வகித்த ஷீலா தீட்சித், டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கானுடன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கவர்னர் மற்றும் உயரதிகாரிகளுடன் அனுசரித்துப் போக தெரியாத கெஜ்ரிவால், தன்னிடம் முழு அதிகாரம் இல்லை என்று கூறிக் கொண்டிருக்காமல் மேம்பாட்டுப் பணிகளில் அக்கறை செலுத்த வேண்டும் என ஷீலா தீட்சித் அறிவுறுத்தினார்.

‘1998 முதல் 2003-ம் ஆண்டுவரை டெல்லி முதல் மந்திரியாக நான் பதவி வகித்த முதல் ஆட்சி காலத்தில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்றது. ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் டெல்லி முதல் மந்திரியாக நான் பொறுப்பேற்றிருந்தபோது எரிசக்தி திறையை தனியார் மயமாக்கியது, டீசல் வாகனங்களுக்கு மாற்றாக இயற்கை எரிவாயுக்கு வாகனங்களை மாற்றியது மற்றும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை எனது அரசு நிறைவேற்றியது.

எங்களுக்கும் பல தடைகள் இருந்தன. ஆனால், கவர்னருடன் மோதல் போக்கை கையாளாமல் டெல்லியின் முன்னேற்றத்துக்காக நாங்கள் பாடுபட்டோம்.

அரசை வழிநடத்துவதில் தோல்வி அடைந்துவிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து தேவை என்று கூறுவதன் மூலம் டெல்லி மண்ணின் மீதும் காவல் துறையிலும் தனக்கு அதிகாரம் இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறார். இருப்பினும், இதர துறைகளில் இந்த ஆம் ஆத்மி அரசு செய்துள்ள சாதனைகள் என்ன? என்பதையும் அவர் குறிப்பிட வேண்டும்.

கவர்னர் மற்றும் தலைமை செயலாளருடன் மோதல் போக்கை கடைபிடித்து, அரசின் துறை செயலாளர்களின் அலுவலகங்களை எல்லாம் பூட்டி வைத்து கொண்டால் எந்த அதிகாரி அவருடன் ஒத்துழைப்பார்? என்பதையும் கெஜ்ரிவால் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல் மந்திரி கவர்னர் மாளிகைக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவது, இதற்கு முன்னர் நாம் காணாத நிகழ்ச்சியாகும். இதன்மூலம் முதல் மந்திரி பதவிக்கான கண்ணியத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தரம் தாழ்த்தி விட்டார்’ என்று ஷீலா தீட்சித் கூறினார். #Kejriwal #SheilaDikshit
Tags:    

Similar News