செய்திகள்

கர்நாடக இடைத்தேர்தல் - ஜெயநகர் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2018-06-11 03:02 GMT   |   Update On 2018-06-11 04:59 GMT
கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. #KarnatakaBypoll #Jayanagar
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று நடந்தது.

அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பா.ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் எம்.எல்.ஏ.வின் சகோதரர் பிரகலாத பாபுவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

சட்டசபை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ், ஜேடி.எஸ். கூட்டணி அமைத்துள்ளதால், ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜே.டி.எஸ். ஆதரவு அளித்துள்ளது.

ஜெயநகர் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மொத்தம் 216 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் பெண்களுக்கென்று 5 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 10 துணை ராணுவ படையினரும் 350 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



23 பறக்கும்படை போலீசார் தொகுதி முழுவதும் ரோந்து சுற்றிவருகிறார்கள். இன்று காலை 6 மணி முதலே வாக்குச்சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.

பா.ஜனதா வேட்பாளர் பிரகலாதபாபுவும் ஓட்டுப் போட்டார். நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன் 51-வது வாக்குச்சாவடியான சுதர்‌ஷன் வித்யாமந்திர் பள்ளியில் ஓட்டுப் போட்டார். தொடர்ந்து மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 500 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 16 பேரும் வாக்காளர்களாக உள்ளனர். ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 3 ஆயிரத்து 184 வாக்காளர்கள் உள்ளனர்.

ஓட்டுப்பதிவுக்காக ஜெயநகர் தொகுதியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று பதிவாகும் ஓட்டுக்கள் 13-ந்தேதி எண்ணப்பட உள்ளன. #KarnatakaBypoll #Jayanagar

Tags:    

Similar News