செய்திகள்

வருமான வரித்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமின்

Published On 2018-06-10 13:54 GMT   |   Update On 2018-06-10 13:54 GMT
வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் தொடர்பாக கணக்கு சமர்ப்பிக்காத கார்த்தி சிதம்பரத்தின் மீது வருமான வரித்துறை விசாரித்து வரும் வழக்கில் அவருக்கு சென்னை ஐகோர்ட் முன் ஜாமின் அளித்துள்ளது. #KarthiChidambaram #anticipatorybail #BlackMoneycase
சென்னை:

சட்டத்தை மீறிய வகையில் வெளிநாடுகளில் சொத்து வாங்கியது தொடர்பாக கணக்குகளை சமர்ப்பிக்காத கார்த்தி சிதம்பரத்தின் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கருப்புப் பண தடுப்பு சடத்தின்கீழ் கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்தனர்.

இந்த விவாகரம் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்குமாறு மூன்று முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக தவறியதால் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க நேற்று நள்ளிரவு சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வீட்டுக்கு சென்ற கார்த்தி சிதம்பரம் தனது வக்கீல்கள் ஏ.ஆர்.எல். சுந்தரேஷ், சதிஷ் பராசரன் 
மூலம் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறிந்து வருமான வரித்துறை வக்கீலும் அதிகாரிகளும் நள்ளிரவு நேரத்தில் நீதிபதியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 18-ம் தேதி அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்த நிலையில், தனது மனைவி, குழந்தைகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புறப்பட்டுச் செல்ல தயாராகும் நிலையில் தனக்கெதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதியிடம் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.

வெளிநாட்டு பயணம் முடிந்து இந்தியா திரும்பியதும், வரும் 28-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக தயாராக இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டார். 

இதையே எழுத்துமூலமான வாக்குறுதியாக பதிவு செய்யுமாறு கூறிய நீதிபதி இந்திரா பானர்ஜி, கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்வரை அவருக்கு எதிராக பிறப்பித்த பிடி வாரண்டை நிறுத்தி வைக்குமாறு வருமான வரித்துறை வக்கீல்களுக்கு உத்தரவிட்டார். பிடி வாரண்ட் நிறுத்தப்பட்டதை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினார். #KarthiChidambaram #anticipatorybail  #BlackMoneycase
Tags:    

Similar News