செய்திகள்

நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் அதிபர்களை ஊக்குவிக்க நடவடிக்கை: பிரதமர் மோடி தகவல்

Published On 2018-06-06 23:09 GMT   |   Update On 2018-06-06 23:09 GMT
நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் அதிபர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #PMModi
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் முனைவோருடன் டெல்லியில் கலந்துரையாடல் நடத்தினார். டேராடூன், கவுகாத்தி மற்றும் ராய்ப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இளம் தொழில் அதிபர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசும் போது பிரதமர் மோடி கூறியதாவது:-

இன்றைய பெரும் நிறுவனங்கள் அனைத்தும் சிறிய புள்ளியில் தொடங்கியவை தான். எனவே இந்தியர்கள் புதுமையை நோக்கி நடைபோடுவதை தொடர வேண்டும். இல்லாவிட்டால் நாம் தேங்கி விடுவோம்.

ஒரு காலத்தில் ‘ஸ்டார்ட் அப்’ என்றால் அது டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் என்றுதான் பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு பிற துறைகளிலும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை நாம் பார்க்க முடிகிறது.

இன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரிய நகரங்களுடன் நின்று விடுவது இல்லை. மாறாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்கள் கூட துடிப்பான ஸ்டார்ட் அப் மையங்களாக உருவாகி வருகின்றன. அந்தவகையில் உலகளாவிய ஸ்டார்ட் அப் சூழியலை பெற்று இந்தியா புகழ்பெற்று விளங்குகிறது.

தங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக இளையோர் சந்திக்கும் நிதி பற்றாக்குறை பிரச்சினையை அரசும் புரிந்து கொண்டுள்ளது. எனவேதான் அதிகமான இளைஞர்கள் இந்த துறையில் சாதிப்பதற்காக ரூ.10 ஆயிரம் கோடிக்கான நிதியை அரசு உருவாக்கி உள்ளது.

இந்திய இளைஞர்கள் இன்று வேலை வாய்ப்பை உருவாக்குகின்றனர். அதன் பலனை அவர்கள் பெறுவதற்கு அரசு உறுதிபூண்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் பொருட்களை அரசிடம் விற்க முடியும். அத்துடன் அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகளையும் அரசு எளிமையாக்கி உள்ளது.

6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தாக்க திறனை மேம்படுத்த 2,500 புதுப்பித்தல் ஆய்வகங்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம். ஒவ்வொரு பள்ளிகளிலும் அறிவியல் ஆய்வகங்கள் இருப்பது போல, இந்த புதுப்பிக்கும் ஆய்வகங்களும் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

நாங்கள் ஒரு மிகப்பெரிய விவசாய சவாலை உருவாக்கி உள்ளோம். இதில் பங்கேற்று நமது வேளாண் துறையை எப்படி மாற்றுவது? என்று சிந்திக்குமாறு இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கு அத்தியாவசியமான சட்ட உதவிகளை மேற்கொள்வதற்காக ஒருங்கிணைப்பாளர் குழு ஒன்றை நாங்கள் உருவாக்கி உள்ளோம். இப்படி நாடு முழுவதும் உள்ள இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 
Tags:    

Similar News