செய்திகள்

கோவில், ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: உ.பி முழுவதும் கண்காணிப்பு தீவிரம்

Published On 2018-06-06 22:06 GMT   |   Update On 2018-06-06 22:06 GMT
உத்தரபிரதேசத்தில் கோவில்கள், ரெயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #UttarPradesh #HighAlert
லக்னோ:

பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, இந்தியாவில் அடிக்கடி கொடூர தாக்குதல் களை அரங்கேற்றி வருகிறது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்பே மூளையாக செயல்பட்டு இருந்தது.

இந்த அமைப்பின் தளபதிகளில் ஒருவரான மவுலானா அம்பு ஷேக் என்ற பெயரில் பிரோஸ்பூரில் உள்ள வடக்கு ரெயில்வே அலுவலகத்துக்கு கடந்த மாதம் 29-ந் தேதி கடிதம் ஒன்று வந்தது. அந்த கடிதத்தில் உத்தரபிரதேசத்தின் சகாரன்பூர் மற்றும் ஹபூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படும் என கூறப்பட்டு இருந்தது.

மேலும் பகவான் கிருஷ்ணர் அவதரித்த இடமான மதுரா மற்றும் காசி விசுவநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழும் என மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த தாக்குதல்கள் ஜூன் 8-ந் தேதி (நாளை) முதல் 10-ந் தேதிக்குள் நடைபெறும் எனவும் அதில் கூறப்பட்டு இருந்தது.

பயங்கரவாதிகளின் இந்த மிரட்டல் கடிதம், உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கடிதத்தில் குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமின்றி பிற முக்கியமான பகுதிகளிலும் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பஸ், ரெயில் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளன.

இது குறித்து மாநில போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் குமார் கூறுகையில், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் கடும் உஷார் நிலை பிறப்பித்து உள்ளோம். ஆனால் லஷ்கர்- இ-தொய்பா தளபதி அம்பு ஷேக் குறித்து உளவுத்துறை யினருக்கு எதுவும் தெரியவில்லை. எனவே இது வெறும் புரளியாகவும் இருக்கலாம்’ என்று தெரிவித்தார். #UttarPradesh #HighAlert
 #tamilnews 
Tags:    

Similar News