செய்திகள்

டெல்லியில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - ஆப்பிரிக்கர் உள்ளிட்ட மூவர் கைது

Published On 2018-06-05 09:30 GMT   |   Update On 2018-06-05 09:30 GMT
நாட்டின் தலைநகர் டெல்லியில் பல்வேறு போதைப்பொருட்களை விற்று வந்த ஆப்பிரிக்க நாட்டவர் உள்ளிட்ட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். #drugcaptured
புதுடெல்லி:

டெல்லியை மையமாக கொண்டு போதைப்பொருட்கள் கடத்தும் கும்பல் இயங்கி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து உத்தம்நகர் பகுதியில் போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மோகன் கார்டன் பகுதியில் உள்ள ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு போதை மருந்து விநியோகித்து வருவதாக அவர்கள் வாக்கு மூலம் அளித்தனர். அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மோகன் கார்டன் பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து அவரிடம் இருந்தும் போதைப் பொருட்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நபர் இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மூலம் ஆப்பிரிக்காவில் இருந்து போதைப்பொருட்கள் இந்தியாவுக்கு கடத்தப்படுவதாகவும், பின்னர் இங்கு இருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #drugcaptured
Tags:    

Similar News