செய்திகள்

நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு- கேரளாவில் பள்ளிகள் திறப்பு தாமதம்

Published On 2018-05-30 05:05 GMT   |   Update On 2018-05-30 05:05 GMT
நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வருகிற 1-ந்தேதிக்கு பதில் ஜூன் 5-ந்தேதி பள்ளிகளை திறக்கும்படி கேரள பள்ளி கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு, மலப்புரம் உள்பட சில மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இதன் காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மேலும் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக அந்த மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோழிக்கோடு, மலப்புரம் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதாக பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும் முக கவசம் மற்றும் விஷேச பாதுகாப்பு ஆடை அணிந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.


இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து வருகிற 1-ந்தேதி கேரளாவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளது. ஆனால் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நிபா வைரஸ் காய்ச்சல் பீதி காரணமாக அந்த மாவட்டங்களை காலி செய்துவிட்டு வெளியூர்களில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இதனால் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் வருகிற 1-ந்தேதிக்கு பதில் ஜூன் 5-ந்தேதி பள்ளிகளை திறக்கும்படி கேரள பள்ளி கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மற்ற மாவட்டங்களில் வருகிற 1-ந்தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Nipahvirus
Tags:    

Similar News