செய்திகள்

ஏர் இந்தியா விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூத்த அதிகாரி

Published On 2018-05-29 09:54 GMT   |   Update On 2018-05-29 10:07 GMT
ஏர் இந்தியா விமான பணிப்பெண்ணுக்கு மூத்த அதிகாரி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்பட்ட புகார் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மந்திரி உத்தரவிட்டுள்ளார். #AirIndiaHostess #AirIndiaExecutiveHarassment
புதுடெல்லி:

தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றும் விமான பணிப்பெண் ஒருவர் மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி சுரேஷ் பிரபுவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தன்னை 6 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு நடுநிலையான விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

‘பெண்களை வேட்டையாடும் அந்த அதிகாரி தன்னுடன் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துக்கொள்ளும்படி என்னிடம் வலியுறுத்தினார். நான் மறுப்பு தெரிவித்ததால் என்னை பல வழிகளில் தொந்தரவு செய்தார். என்னை அவமதித்ததுடன், எனக்கான சலுகைகளையும் வழங்க மறுத்துவிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பாக புகார் அளித்தேன். விமான நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருக்கும் கடிதம் எழுதினேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விமான நிறுவனத்தின் மகளிர் பாதுகாப்பு பிரிவும் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்தவில்லை. கம்பெனி சார்பில் அமைக்கப்பட்ட குழு சரியான முறையில் விசாரணை நடத்தவில்லை’ என்று அந்த பணிப்பெண் கூறியிருந்தார்.

இதையடுத்து அந்த பெண்ணுக்கு விமான போக்குவரத்து துறை மந்திரி பதில் அனுப்பி உள்ளார். அதில், புகார் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணும்படி ஏர் இந்தியா தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரிடம் கூறியிருப்பதாகவும், தேவைப்பட்டால் மற்றொரு குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். #AirIndiaHostess #AirIndiaExecutiveHarassment

Tags:    

Similar News