செய்திகள்

மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க முடியும் - ப.சிதம்பரம்

Published On 2018-05-23 09:12 GMT   |   Update On 2018-05-23 09:12 GMT
மத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க முடியும் என மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #PetrolPrice #Chidambaram
புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரலாறு காணாத வகையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருப்பதால், மற்ற பொருட்களின் விலை உயர்ந்து நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், விலை உயர்வில் இருந்து சாமானிய மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் எந்த வரி குறைப்பையும் இதுவரை செய்யவில்லை.

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.79 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.87 ஆகவும் இருந்தது. மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல், டீசல் விலை மாறுபடும். இதற்கு மாநில அரசுகள் விதிக்கிற உள்ளூர் வரி அல்லது மதிப்பு கூட்டு வரிதான் காரணம் ஆகும்.



மத்திய அரசைப் பொறுத்தவரையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48-ம், ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

பெட்ரோல் விலை உயர்வு குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி  ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்படும்போது ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் மத்திய அரசு ரூ.15  சேமிக்கிறது. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலிலும் மத்திய அரசு 10 ரூபாய் கூடுதலாக வரி வைக்கிறது. எனவே, மத்திய அரசுக்கு பெட்ரோல் ஒவ்வொரு லிட்டருக்கும் ரூ. 25 கிடைக்கும். இந்த பணம் சராசரி வாடிக்கையாளருக்கு சொந்தமானது.

எனவே, லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வரை குறைக்க முடியும், ஆனால் இந்த அரசாங்கம் இதை செய்யாது.  பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 அல்லது 2 ரூபாய் குறைப்பதன் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார். #PetrolPrice #Chidambaram
Tags:    

Similar News