செய்திகள்

சோனியா-ராகுல்காந்தியுடன் குமாரசாமி நாளை சந்திப்பு

Published On 2018-05-20 05:37 GMT   |   Update On 2018-05-20 05:43 GMT
காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடக முதல்வராக பதவி ஏற்க உள்ள குமாரசாமி, சோனியா மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

பெங்களூர்:

கர்நாடகத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி வருகிற 23-ந்தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.

38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை. அதையும் தாண்டி 116 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மந்திரி சபைக்கு உள்ளது.

தனக்கு ஆதரவு அளிக்கும் முடிவு எடுத்த சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு குமாரசாமி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நாளை குமாரசாமி டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறார். மேலும் கூட்டணி மந்திரி சபையில் காங்கிரசுக்கு எத்தனை மந்திரி பதவி அளிப்பது, யார்-யாரை நியமிப்பது பற்றியும், சோனியா, ராகுலுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார்.

இந்த சந்திப்பின் போது பதவி ஏற்பு விழாவுக்கு வருகை தருமாறு சோனியா, ராகுலுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கிறார்.

பின்னர் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை முறியடித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட், சுப்ரீம் கோர்ட்டில் வாதாடிய காங்கிரஸ் தலைவர்கள் கபில்சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்ட மூத்த தலைவர்களையும், சந்தித்து நன்றி தெரிவிக்கிறார். அவர்களையும் பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கிறார்.

குமாரசாமி மந்திரிசபை பதவி ஏற்பு விழா பெங்களூர் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. எடியூரப்பாவும் பதவி ஏற்க இந்த ஸ்டேடியத்தைத்தான் தேர்வு செய்து வைத்திருந்தார். பின்னர் கவர்னர் மாளிகையிலேயே தனி ஆளாக பதவி ஏற்றார்.

அவர் தேர்வு செய்த ஸ்டேடியத்தில் குமாரசாமி பதவி ஏற்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  #KarnatakaElection2018 #SoniaGandhi #RahulGandhi #Kumaraswamy

Tags:    

Similar News