செய்திகள்

மெஜாரிட்டியை நிரூபிக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் எங்களிடம் இருக்கிறார்கள் - எடியூரப்பா

Published On 2018-05-19 03:41 GMT   |   Update On 2018-05-19 03:41 GMT
கர்நாடக சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் தங்களிடம் இருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். #KarnatakaCMRace #Yeddyurappa #Karnatakafloortest
பெங்களூரு:

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை  இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். கர்நாடகாவில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் எடியூரப்பா நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட்டார்.

அதன்படி மாநில சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடுகிறது. முதலில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். அதன்பின்னர் அரசு மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன்மீது மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். இதையொட்டி சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் எடியூரப்பா இன்று ஓட்டலுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெற போதுமான எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என கூறினார். மேலும், அமைச்சரவையை நாளை கூட்டி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்றும் அவர் உறுதி அளித்தார்.

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது அரசு வெற்றி பெற்றதும், மாலை 5 மணிக்கு பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள் என்றும் எடியூரப்பா கூறினார்.



ஆட்சியமைக்க 112 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் பா.ஜ.க.விடம் 104 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளது. எனவே, மெஜாரிட்டியை நிரூபிக்க, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில எம்.எல்.ஏ.க்களை காணவில்லை என்றும் கூறப்படுவதால் அவர்கள் பா.ஜ.க.விடம் விலைபோயிருக்கலாம் என தெரிகிறது.  #KarnatakaCMRace #Yeddyurappa #Karnatakafloortest
Tags:    

Similar News