செய்திகள்

22 ஆண்டுகளுக்கு பிறகு தேவேகவுடாவை பழிதீர்த்த கவர்னர் வஜுபாய் வாலா

Published On 2018-05-17 06:50 GMT   |   Update On 2018-05-17 06:50 GMT
தேவேகவுடா செய்த காரியத்துக்காக இன்று கவர்னர் வஜுபாய் வாலா 22 ஆண்டுகளுக்கு பிறகு அவரை பழிவாங்கி விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். #KarnatakaElection2018 #VajubhaiVala #DeveGowda
பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முன்வந்தது.

இதன்மூலம் மெஜாரிட்டி உறுப்பினர்களை பெற்ற ஜனதாதளம் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரியது.

ஆனால், தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க கவர்னர் வஜுபாய்வாலா அழைப்பு விடுத்தார். இதையடுத்து எடியூரப்பா முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றுள்ளார்.

மணிப்பூர், கோவா, மேகாலயா மாநிலங்களில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வந்திருந்த போதும், பாரதிய ஜனதா எதிர்க்கட்சிகளை தன் பக்கம் இழுத்து கூடுதல் எண்ணிக்கையை காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

அந்த மாநில கவர்னர்கள் பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தனர். அதேபோல்தான் கர்நாடக கவர்னரும் நடந்து கொள்வார். மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் தனிப்பெரும் கட்சியான பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து விட்டார்.


இதை பழைய சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தி தேவேகவுடாவை கவர்னர் வஜுபாய்வாலா பழிவாங்கி விட்டதாக கூறுகின்றனர்.

1996-ம் ஆண்டு தேவேகவுடா காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமராக இருந்து வந்தார். அப்போது குஜராத் மாநிலத்தில் சுரேஷ் மேத்தா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வந்தது.

பாரதிய ஜனதாவில் முக்கிய தலைவராக இருந்த சங்கர்சிங் வகேலா கட்சியில் கலகத்தை ஏற்படுத்தி தனி அணியாக பிரிந்தார். இதன் பின்னணியில் காங்கிரஸ் செயல்பட்டது.

சுரேஷ் மேத்தா ஆட்சி மெஜாரிட்டி இழந்து விட்டதாக சங்கர்சிங் வகேலா கூறினார்.

இதனால் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி சுரேஷ் மேத்தாவுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் படி சுரேஷ்மேத்தா சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபித்தார்.

ஆனால், அப்போது மத்தியில் இருந்த தேவேகவுடா அரசு குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. கவர்னரின் அறிக்கையின் அடிப்படையில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக மத்திய அரசு கூறியது.

ஆனால், இது ஜனநாயக படுகொலை என கூறி குஜராத் பாரதிய ஜனதா போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது குஜராத் பாரதிய ஜனதாவில் வஜுபாய்வாலா முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார்.

அன்று தேவேகவுடா செய்த காரியத்துக்காக இன்று வஜுபாய்வாலா 22 ஆண்டுகளுக்கு பிறகு அவரை பழிவாங்கி விட்டதாக கூறுகின்றனர்.

கவர்னர் நினைத்திருந்தால் மெஜாரிட்டி எண்ணிக்கையை காட்டிய குமாரசாமியை பதவி ஏற்கும்படி அழைத்து இருக்கலாம். ஆனால், அவர் ஆட்சிக்கு வருவதை தடுத்து பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வழி ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

வஜுபாய்வாலா குஜராத்தில் ராஜ்கோட் தொகுதியில் 7 முறை பாரதிய ஜனதா சார்பில் வெற்றி பெற்றவர். அவர், நீண்ட காலமாக குஜராத் பா.ஜ.க. அரசின் 2-ம் நிலை மந்திரியாக இருந்து வந்தார். பெரும்பாலும் நிதி மந்திரியாக இருந்த அவர் 18 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

மோடி குஜராத் முதல்- மந்திரியாக பதவி ஏற்ற போது அவருக்காக தனது தொகுதியை வஜுபாய் வாலா விட்டு கொடுத்தார்.

பின்னர் மோடி மணி நகர் தொகுதியை தேர்வு செய்ததால் மீண்டும் ராஜ்கோட் தொகுதியில் வஜுபாய் வாலா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து குஜராத்தில் யார் முதல்- மந்திரி என்ற கேள்வி எழுந்த போது, வஜுபாய் வாலா பெயர் தான் முதலிடத்தில் இருந்தது.

ஆனால், ஆனந்தி பென் பட்டேல் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். வஜுபாய் வாலாவுக்கு கர்நாடக கவர்னர் பதவி வழங்கப்பட்டது.

இடையில் ஆனந்திபென் பட்டேல் ராஜினாமா செய்த போதும் வஜுபாய் வாலா முதல்- மந்திரியாக தேர்வாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், விஜய்ரூபானியை முதல்- மந்திரியாக்கினார்கள்.

இன்று கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் வஜுபாய் வாலா சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

இவர் மீது ஏற்கனவே சில சர்ச்சைகளும் எழுந்துள்ளன. தனது வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்காக ரூ.4 கோடி செலவிட்டதாகவும், ஒரு தடவை தனி ஜெட் விமானத்தில் குஜராத்துக்கு சென்றதாகவும் சர்ச்சைகள் எழுந்தன.

மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேர்வில் பல்வேறு தவறுகள் நடந்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. #KarnatakaElection2018 #VajubhaiVala #DeveGowda
Tags:    

Similar News