செய்திகள்

ஜார்கண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை, ஆந்திராவில் மத்திய பல்கலை. - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published On 2018-05-16 12:20 GMT   |   Update On 2018-05-16 12:20 GMT
எய்ம்ஸ் மருத்துவமனை, மத்திய பல்கலைக்கழகம், மெட்ரோ ரயில் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. #Cabinet #AIIMS
புதுடெல்லி :

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

அதன்படி பின்வரும் திட்டங்களுக்கு மத்திய மந்திரி ஒப்புதல் வழங்கியுள்ளது:-

பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 1,103 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

அந்திரப் பிரதேசம் மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஜந்தலூரு கிராமத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய பல்கலைக்கழகம் அமைய உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காசியாபாத் நகர் வரை இயக்கப்படும் மெட்ரொ ரயில் திட்டத்தை ரூ.1,967 கோடி முதலீட்டில் நொய்டா நகர் வரை விரிவாக்கம் செய்யப்பட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி-மும்பை தொழில்துறை மையங்கள் திட்டத்தின் கீழ் அதிகளவிலான சரக்கு பொருட்களை கையாள வசதியாக 1,029 கோடி ரூபாய் மதிப்பில், அரியானா மாநிலம் மகேந்தரகார்த் மாவட்டத்தில் உள்ள நங்கல் சௌத்ரி பகுதியில் சரக்கு முனையம் அமைக்க மத்திய பொருளாதார விவகாரத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு படையினரின் தகவல் தொலைத்தொடர்பை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் நவீன அலைவரிசையை பயன்படுத்த ஆப்டிகல் பைபர் தளம் அமைக்க சுமார் 11,330 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Cabinet #AIIMS #CentralUniversity
Tags:    

Similar News