செய்திகள்

சம்மதத்துடன் ஈடுபடும் ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது: ஐ.ஐ.டி. மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Published On 2018-05-15 22:56 GMT   |   Update On 2018-05-15 22:56 GMT
சம்மதத்துடன் ஈடுபடும் ஓரினச் சேர்க்கையை குற்றமாக கருதக்கூடாது என ஐ.ஐ.டி. மாணவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தனர். #IITStudent #SupremCourt
புதுடெல்லி:

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு இயற்கைக்கு மாறாக ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது. மேலும் ஓரினச் சேர்க்கை சட்டப்படி கிரிமினல் குற்றம் என்பதை சுப்ரீம் கோர்ட்டு 2013-ம் ஆண்டு உறுதி செய்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஐ.டி. மாணவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்ட 20 பேர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தனர். அதில், ஒருவரின் சம்மதத்துடன் ஈடுபடும் ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றமாக்கி இருப்பது இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமத்துவ உரிமை, கண்ணியம், சுதந்திரம், உணர்வு வெளிப்பாடு ஆகியவற்றுக்கு தடை போடுவதாக உள்ளது. எனவே இதை குற்றச் செயலாக்கி இருப்பதை தடை செய்யவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்ற ஒரு மனுவை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.  #IITStudent #SupremCourt
Tags:    

Similar News