செய்திகள்

இன்றும் நாளையும் ஐதராபாத்தில் பயங்கர அனல் காற்று வீசும்- தெலுங்கானா அரசு எச்சரிக்கை

Published On 2018-05-03 05:15 GMT   |   Update On 2018-05-03 05:15 GMT
ஐதராபாத் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் மேலும் அதிகமாக வெயில் கொளுத்தும் என்றும், பயங்கர அனல் காற்று வீசும் என்றும் தெலுங்கானா அரசு எச்சரித்துள்ளது.#Heatwave #Hyderabad
ஐதராபாத்:

ஐதராபாத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களிலும் அதிக வெயில் கொளுத்துகிறது.

ஐதராபாத்தில் இந்த ஆண்டு இதுவரை அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் ஐதராபாத் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்றும், நாளையும் மேலும் அதிகமாக வெயில் கொளுத்தும் என்றும், பயங்கர அனல் காற்று வீசும் என்றும் தெலுங்கானா அரசு எச்சரித்துள்ளது.

இந்த 2 நாட்களிலும் 108 டிகிரி முதல் அதிகபட்சமாக 113 டிகிரி வரை வெயில் கொளுத்தும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு போதிய குடிநீரை சப்ளை செய்யுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிகளில் போதிய மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அதிலாபாத் மாவட்டத்தில் இதற்கு முன்பு அதிக பட்சமாக 113 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மகபூப்நகர் மாவட்டத்தில் 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

அதிக வெயில் கொளுத்துவதால் ஏற்படும் வெப்பச் சலனம் காரணமாக 4 மணி முதல் 5 மணி வரை இடியுடன் பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆல்வால், பூவன்பள்ளி, ஜூப்ளிஹில்ஸ், செகந்திரபாத், மால்களுகிரி, உப்பல், கப்ரா ஆகிய இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கம்மம், நல்கொண்டா, மெகபூபாபாத் மற்றும் வாரங்கல் மாவட்டங்களிலும் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மழை 2 நாட்களுக்கு பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. #Heatwave #Hyderabad
Tags:    

Similar News