செய்திகள்

ரோட்டோமேக் அதிபர் கோத்தாரிக்கு சி.பி.ஐ. காவல் - லக்னோ அழைத்துச் சென்று விசாரணை

Published On 2018-02-24 09:23 GMT   |   Update On 2018-02-24 09:23 GMT
ரூ.3695 கோடி வங்கி கடன் மோசடியில் ‘ரோட்டோமேக்’ அதிபர் விக்ரம் கோத்தாரியிடம் விசாரணை நடத்த ஒருநாள் சி.பி.ஐ. காவலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

பிரபல பேனா நிறுவனமான ‘ரோட்டோமேக்’ அதிபர் விக்ரம் கோத்தாரி.

இவர் அலகாபாத் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 5 வங்கிகளில் ரூ. 3,695 கோடி கடன்பெற்று திருப்பிச் செலுத்தவில்லை. இதையடுத்து வங்கி நிர்வாகம் சார்பில் சி.பி.ஐ.யில் அவர்மீது மோசடி புகார் செய்யப்பட்டது.

சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து நேற்று முன்தினம் விக்ரம் கோத்தாரி, அவரது மகன் ராகுல் கோத்தாரி ஆகியோரை கைது செய்தது. விசாரணைக்குப் பின்பு இருவரும் நேற்று டெல்லி கூடுதல் முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி சமர் விஷால் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது சி.பி.ஐ. தரப்பில் இருவரையும் லக்னோ அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டி இருப்பதால் 2 நாள் காவலில் எடுக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிபதி ஒருநாள் மட்டும் காவல் வழங்கி உத்தரவிட்டார். ஒருநாள் காவலுக்கு பின்பு மீண்டும் இந்த கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து தந்தை மகன் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று லக்னோ அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News