செய்திகள்

லல்லு ஊழலை கண்டுபிடித்தது எப்படி?: முறைகேட்டை அம்பலப்படுத்திய அதிகாரி பேட்டி

Published On 2017-12-25 12:50 IST   |   Update On 2017-12-25 12:50:00 IST
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கால்நடைத் தீவன ஊழல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தது எப்படி என்பது குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித்காரே விளக்கமாக கூறினார்.

ராய்பூர்:

பீகார் மாநிலத்தில் 1995-ம் ஆண்டு லாலு பிரசாத் முதல்-மந்திரியாக இருந்த போது ரூ. 950 கோடிக்கு மாட்டு தீவன ஊழல் நடந்தது. இதில் லாலுபிரசாத்தே நேரடியாக சம்பந்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது. அதில் லாலுபிரசாத் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒரு வழக்கில் ஏற்கனவே 5 ஆண்டுகள் தண்டனை பெற்று ஜாமீனில் விடுதலையாகி இருந்தார்.

இப்போது 2-வது வழக்கில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். வருகிற 3-ந் தேதி அவருக்கு தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. இதனால் லாலு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாட்டு தீவன ஊழல் விகாரம் வெளியே வந்ததற்கு அப்போது இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமித்காரே காரணமாக இருந்தார். தற்போது அவர் ஜார்கண்ட் மாநிலத்தில் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வருகிறார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊழல் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்தது எப்படி? என்பது குறித்து அமித்காரே கூறியதாவது:-

1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்வு செய்யப்பட்ட நான், 1996-ம் ஆண்டு வாக்கில் சாய்பாசாவில் துணை கமி‌ஷனராக இருந்து வந்தேன்.

அப்போது மாநில நிதித்துறையில் இருந்து எங்களிடம் ஒரு அறிக்கை கேட்டு இருந்தனர். கால்நடை துறை, பால்வளத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றில் இருந்து கடந்த 3 மாதங்களில் எடுக்கப்பட்ட பணம் குறித்து இந்த அறிக்கை கேட்கப்பட்டு இருந்தது.

எனவே, அது சம்பந்தமான அறிக்கையை நான் தயாரித்து கொண்டு இருந்தேன். அப்போது பல பில் ரசீதுகள் மூலம் ரூ.7 கோடி, ரூ.8 கோடி என பணம் எடுக்கப்பட்டு இருந்தது.

இந்த துறைகளில் இவ்வளவு பணம் எடுப்பது என்பது அசாதாரண வி‌ஷயமாகும். எனவே எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதுபற்றி முழுமையாக விசாரணை மேற்கொண்டேன்.

1996 ஜனவரி மாதம் சாய்பாசா கருவூலத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினேன். அப்போது கால்நடைதுறை மூலமாக எடுக்கப்பட்ட பணம் குறித்து ஆய்வு செய்தேன். அதில் பல பில்கள் ஒரே நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டு இருந்தது. அதிலும் ஒரே தொகையையே பல பில்களில் குறிப்பிட்டு இருந்தனர்.

எனவே, சந்தேகம் வலுத்தது. நான் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், கீழ்நிலை ஊழியர்களிடமும் விசாரித்த போது முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்தது.

எனவே, கருவூல கோப்புகளை சேகரித்து சீல் வைக்க உத்தரவிட்டேன். போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தேன். மேலும் கணக்கு துறையிலும் இதுபற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது அதில் பல கோடி ரூபாய் மோசடி செய்து பணம் எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

எனவே, நானே புகார் கொடுத்த வழக்கு பதிவு செய்ய வைத்தேன். இதன் பிறகு சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது. முழு ஊழல் விவகாரமும் வெளிவந்தது.

நான் இந்த பிரச்சினையை கையில் எடுக்கும் போதே எனது நண்பர்கள் சிலர் எச்சரித்தனர். தேவை இல்லாத பிரச்சினையில் சிக்க வேண்டியது வரும் என்று கூறினார்கள்.

நான் அதை பற்றி கவலைப்பட வில்லை. ஊழலை அம்பலப்படுத்தியே தீருவது என்பதில் உறுதியாக இருந்தேன். எனது குடும்பத்தை பற்றி கூட நான் கவலைப்படவில்லை. ஒரு நேர்மையான அதிகாரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதிலேயே தீர்மானமாக இருந்தேன்.

அதே நேரத்தில் பத்திரிகைகள், சமூக ஆர்வலர்கள், பல உயர் அதிகாரிகள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். இதனால்தான் இந்த ஊழலை முழுமையாக வெளிக்கொண்டு வர முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News