செய்திகள்

1 சதவீத பழைய ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கிக்கு வராதது சாதனையா? ரிசர்வ் வங்கிக்கு ப.சிதம்பரம் கேள்வி

Published On 2017-08-31 06:12 IST   |   Update On 2017-08-31 06:12:00 IST
ஒரு சதவீத அளவிற்கே பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியிருப்பது வெட்ககேடானது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்
புதுடெல்லி:

ரிசர்வ் வங்கி 2016-17-க்கான ஆண்டறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் பண மதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளில் 1 சதவீதம் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு மூலம் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

99 சதவீத பழைய நோட்டுகள் வங்கிகளில் சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டு உள்ளது. ஒரு சதவீத அளவிற்கே பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறியிருப்பது வெட்ககேடானது. இதுதான் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் சாதனையா? இதற்காகத்தானா பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டது?... இந்த நடவடிக்கையில் மத்திய அரசு முற்றிலும் தோல்வி கண்டதுடன் அப்பாவி மக்கள் 104 பேரையும் பலி வாங்கியது. இதற்காக பிரதமர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பின்னணியில் இருந்த பொருளாதார நிபுணர்கள் நோபல் பரிசு பெற தகுதியானவர்கள். ஏனென்றால், பழைய நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு வந்ததால் ரூ.16 ஆயிரம் கோடி லாபம் கிடைத்து உள்ளது. அதே நேரம் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக ரூ.21 ஆயிரம் கோடி செலவிடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

Similar News