செய்திகள்

மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அமைதிப் படை: முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

Published On 2017-07-06 11:17 IST   |   Update On 2017-07-06 11:17:00 IST
மேற்கு வங்கத்தில் புனித ஸ்தலம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை பேஸ்புக்கில் பதிவு செய்ததால் கலவரம் ஏற்பட்டது. எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்க "சாந்தி வாஹினி" என்ற அமைதிப்படை உருவாக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புனித தலத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்த தகவலை தொடர்ந்து பாதுரியா பகுதியில் மதக்கலவரம் ஏற்பட்டது. கலவரக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, கடைகளை அடித்து நொறுக்கினர். போலீசார் குவிக்கப்பட்டும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. கலவரத்தை அடக்க எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 400 வீரர்கள் வரவழைக்கப்பட்டு, பதற்றம் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

இந்நிலையில், சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால் மேற்கு வங்க அரசை உடனடியாக கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க.வினர் மத்திய அரசிடம் நேற்று கோரிக்கை விடுத்தனர்.

இதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி "சாந்தி வாஹினி" என்ற பெயரில் அமைதிப்படையை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் போலீஸார், மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரும் இணைந்து வதந்திகள் மற்றும் கலவரத்தை தூண்டுபவர்கள் என அனைவரையும் கண்காணித்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கினை காக்க பாடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பாசிர்கட் துணைக்கோட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் அறிவித்துள்ளார்.

Similar News