செய்திகள்

திரைப்படமாகும் முன்னாள் ’பிரதமர்’ மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு

Published On 2017-06-08 04:12 IST   |   Update On 2017-06-08 04:12:00 IST
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடிக்க உள்ளார்.
புதுடெல்லி:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில், அவரது கதாபாத்திரத்தில் அனுபம் கெர் நடிக்க உள்ளார்.

2006-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் இந்திய பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், பிரதமராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, அவரது ஊடக ஆலோசகரான சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” என்ற பெயரில் திரைப்படம் உருவாக உள்ளது.

இப்படத்தில் இயக்குநர் அனுபம் கெர் மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்க இருக்கிறார். தனது டிவிட்டர் செய்தியில் இதை தெரிவித்துள்ள அனுபம் கெர், "தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்" என்ற திரைப்படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை இழந்த மன்மோகன் சிங் சார்ந்துள்ள காங்கிரஸ் கட்சியை, அனுபர் கெர் அடிக்கடி விமர்சித்திருக்கிறார். "சமகால வரலாற்றை சேர்ந்தவர்கள் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது மிகவும் சவாலானது" என்று அனுபம் கெர் கூறியுள்ளார். மேலும், "சவால்களை எதிர்கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு, என்னுடைய முதல் படமான சாரன்ஷ்-இல் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து நான் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமுடன் இருக்கிறேன். எனவே, பிரதமர் மன்மோகன் சிங்கை சித்தரிக்கும் அனுபவத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், இத்திரைப்படம் தொடர்பாக மன்மோகன் சிங்கிடம் இருந்து எந்த கருத்துக்களும் வெளியாகவில்லை.

Similar News