செய்திகள்

அமோனியா வாயு கசிவால் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 2 பேர் காயம்

Published On 2017-03-15 12:24 GMT   |   Update On 2017-03-15 12:24 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் அமோனியா வாயு கசிந்து ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார். சிலர் காயமடைந்துள்ளனர்.
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலம், கான்பூர் அருகே உள்ள சிவ்ராஜ்பூர் பகுதியில் குளிர்பதன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகின்றது. இங்கு பழங்கள், காய்கறிகள் போன்ற குளிரில் சேமித்து வைக்க வேண்டிய பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.

இன்று பிற்பகல் இந்த குடோனில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதால், வெடிவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த கிடங்கு இடிந்து விழுந்தது. இதனால், குடோன் உரிமையாளர், அவரது மகன், ஊழியர்கள் மற்றும் விளைபொருட்கள் கொண்டு வந்த விவசாயிகள் என சுமார் 25 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.



இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகி உள்ளார். அவரது உடல் மீட்கப்பட்டது. 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

Similar News