செய்திகள்

சசிகலா பதவியேற்பு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

Published On 2017-02-13 13:44 IST   |   Update On 2017-02-13 13:45:00 IST
சசிகலா பதவியேற்பு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

அ.தி.மு.க.வில் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவதில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இடையே கடும் போட்டி நிலவுகிறது. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார் சசிகலா. அதேசமயம், ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.

கவர்னர் காலதாமதம் செய்தால் குதிரை பேரத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்கு தொடர முடியும் என பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கேற்ப, வழக்கறிஞர் எம்.எல். ஷர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஒரு பொதுநலன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் சசிகலாவை ஆட்சியமைக்க 24 மணி நேரத்திற்குள் அழைப்பு விடுக்கும்படி ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



இதையடுத்து சட்டப் பஞ்சாயத்து இயக்கம் சார்பில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சசிகலா பதவியேற்பு தொடர்பாக, தங்களது வாதங்களைக் கேட்காமல் ஆளுநருக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

Similar News