செய்திகள்

வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வருமான வரி இலாகா ஆதாரம் கேட்காது

Published On 2016-11-29 02:41 GMT   |   Update On 2016-11-29 02:41 GMT
வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் கணக்கில் காட்டாத பணத்துக்கு வாடிக்கையாளர்களிடம் வருமான வரி இலாகா ஆதாரம் கேட்காது என்று மத்திய வருவாய்த்துறை விளக்கம் அளித்து உள்ளது.
புதுடெல்லி:

அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பிறகு வங்கிகளில் வாடிக்கையாளர் கள் அதிக அளவில் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர். கடந்த 10-ந் தேதி முதல் இப்படி வங்கிகளில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. அதே நேரம் கணக்கில் காட்டாத வருமானத்தை வங்கியில் செலுத்துவதன் மூலம் தங்களுக்கு சிக்கல் வருமோ, அதுபற்றி வருமான வரி இலாகாவினர் கணக்கு கேட்பார்களோ என்ற அச்சமும் பலரிடம் உள்ளது.

இது குறித்து மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கணக்கில் காட்டாத பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்தால் அதற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும். அதே நேரம் இந்த பணம் எப்படி வந்தது என்பது பற்றி வருமான வரி இலாகா கேள்விகள், ஆதாரம் எதையும் டெபாசிட் செய்வோரிடம் கேட்காது.

சொத்து வரி, சிவில் சட்டங்கள் மற்றும் வரி விதிப்பு சட்டங்களின் அடிப்படையில் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

அதே நேரம் அன்னிய செலாவணி முறைப்படுத்துதல் சட்டம், சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டம், போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டம் மற்றும் கருப்பு பணச் சட்டம் ஆகியவற்றுக்குள் வந்தால் இதற்கு எவ்வித விதி விலக்கும் கிடையாது.

கடந்த 10-ந் தேதி முதல் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் டெபாசிட் செய்த கணக்கில் காட்டாத பணம் பிரதமரின் ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் அடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News