செய்திகள்

நடிகையை வைத்து குத்துவிளக்கேற்றியதால் விழாவை புறக்கணித்து வெளியேறிய பினராய் விஜயன்

Published On 2016-11-26 05:32 GMT   |   Update On 2016-11-26 05:32 GMT
கொச்சி மாநகர போலீஸ் இலாகா சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு மையம் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான அலுவலக கட்டிட திறப்பு விழாவில் நடிகையை வைத்து குத்துவிளக்கேற்றியதால் விழாவை பாதியில் புறக்கணித்து பினராய் விஜயன் வெளியேறினார்.
திருவனந்தபுரம்:

கொச்சி மாநகர போலீஸ் இலாகா சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு மையம் மற்றும் பெண் அதிகாரிகளுக்கான அலுவலக கட்டிட திறப்பு விழா நேற்று கொச்சியில் நடந்தது.

இந்த விழாவில் முதல்-மந்திரி பினராய் விஜயன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி புதிய கட்டிடத்தை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அழைப்பிதழிலும் அவரது பெயரே அச்சிடப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று விழா தொடங்கியதும் முதல்-மந்திரி பினராய் விஜயன் நிகழ்ச்சிக்கு சென்றார். போலீஸ் கமி‌ஷனர் தினேஷ் அவரை வரவேற்று மேடையில் அமர வைத்தார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் குத்து விளக்கேற்ற முதல்-மந்திரி பினராய் விஜயனை அழைப்பதற்கு பதில், நடிகை ஷீலா குத்து விளக்கேற்றுவார் என்றார். இதைகேட்டதும் முதல்-மந்திரியின் முகம் மாறியது.

அடுத்து கட்டிட திறப்பு விழா என்று கூறிய தொகுப்பாளர், புதிய கட்டிடத்தை பெண் ஏ.டி.ஜி.பி. சந்தியா திறந்து வைப்பார் என்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்-மந்திரி பினராய்விஜயன் மேடையில் இருந்து எழுந்தார். உடனே கமி‌ஷனர் தினேஷ் அருகில் சென்று அவரை சமரசம் செய்தார்.

பெண்களுக்கான நிகழ்ச்சி என்பதால் பெண்களை வைத்து குத்து விளக்கு ஏற்றல் மற்றும் கட்டிட திறப்பை நடத்தியதாக கூறினார். இதைக்கேட்டு சமரசம் அடையாத முதல்-மந்திரி நிகழ்ச்சியை புறக்கணித்து பாதியில் வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News