ராம்ஜெத்மலானி மேல்-சபை எம்.பி.யாக வாய்ப்பு
புதுடெல்லி:
டெல்லி மேல்–சபையில் 57 உறுப்பினர்களின் பதவி காலம் ஜூன் மற்றும் ஆகஸ்டு மாதங்களில் காலியாகின்றன. மொத்தம் 15 மாநிலங்களில் காலியாகும் இந்த பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 11–ந்தேதி நடக்கிறது.
பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் பதவி காலியாகிறது. தற்போதுள்ள நிலவரப்படி ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 2 உறுப்பினர்கள் மட்டுமே கிடைப்பார்கள்.
எஞ்சிய 3 உறுப்பினர் பதவிகளில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் (ஆர்.ஜே.டி.) கட்சி இரண்டும், பா.ஜனதா வுக்கு ஒன்றும் கிடைக்க உள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ் தனது மனைவியும், மாநில மேலவை உறுப்பினருமான ராப்ரிதேவி, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ராம்ஜெத்மலானி ஆகியோருக்கு இப்பதவிகளை அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
லல்லுபிரசாத் டெல்லி செல்லும்போது அவர் தங்குவதற்கு முக்கிய பகுதியில் தற்போது குடியிருப்பு இல்லை. இதனால் தூரத்தில் உள்ள குர்கான் நகரில் தனது பண்ணை வீட்டில் தங்குகிறார்.
தனது குடும்பத்தில் ஒருவரை டெல்லி மேல்– சபை உறுப்பினர் ஆக்கினால் இப்பிரச்சினை தீரும் என்பது அவரது யோசனை. இதனால் ராப்ரிதேவியை மேல்–சபை எம்.பி.யாக்க அவர் முடிவு எடுத்துள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராம்ஜெத்மலானி வாதிட்டு வருவதால் அவரை ஊக்கப்படுத்தும் விதமாக மேல்–சபை எம்.பி. பதவியை கொடுக்க லல்லு முடிவுசெய்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த தனது மகள் மிசாபாரதிக்கு, ராப்ரிதேவி ராஜினாமா செய்யும் மாநில மேலவை உறுப்பினர் பதவியை கொடுக்கவும் லல்லு முடிவு செய்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் சார்பில் முன்னாள் தேசிய தலைவர் சரத்யாதவ், தேசிய பொதுச் செயலாளர் கே.சி.தியாகி ஆகியோருக்கும் மேல்–சபை எம்.பி. பதவியை கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜனதா சார்பில் முன்னாள் துணை முதல்– மந்திரி சுசில்குமார் மோடி தேர்வு செய்யப்பட உள்ளார்.