சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இன்று வந்தே மாதரம் பற்றி பேசுகிறார்கள் - அகிலேஷ் யாதவ்
- ஆளும் தரப்பில் உள்ளவர்கள், தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத தலைவர்களைத் தமதாக்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் முயல்கிறார்கள்
- சவர்க்கர் சிறையில் இருந்தபோது கருணை மனுக்களை எழுதி, தனக்கான விடுதலையைப் பெற்றார். ஆனால், அந்த நேரத்தில் அந்தமான் சிறையில் இருந்த 585 கைதிகளில் 398 வங்காளிகள், தங்களின் தனிப்பட்ட விடுதலையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தனர்.
பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' குறித்து நாடாளுமன்றத்தில் இன்று 10 மணி நேரம் நடைபெற்ற விவாதம், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளிடையே பெரும் வார்த்தைப் போருக்கு வழிவகுத்தது.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இப்போது வந்தே மாதரத்தை நாட்டில் பிளவை ஏற்படுத்த ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதன்போது வந்தே மாதரம் தேசிய கீதம் ஆகாததற்கு நேருவே காரணம் என மக்களவையில் மோடி வசை பாடினார்.
இதற்கிடையில் சமாஜ்வாடி கட்சித் தலைவரும் எம்.பியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், பிளவுபடுத்தும் சக்திகள் வந்தே மாதரத்தை பிரிவினையை உருவாக்கப் பயன்படுத்துகின்றனர் என்றும், இந்த நபர்கள் இன்றும் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய அதே பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்றும் பாஜகவை விமர்சித்தார்.
மேலும் "சுதந்திர போராட்டத்தால் பங்கேற்காதவர்கள் இன்று வந்தே மாதரம் பற்றி பேசுகிறார்கள். ஆளும் தரப்பில் உள்ளவர்கள், தங்களுக்குச் சற்றும் தொடர்பில்லாத தலைவர்களைத் தமதாக்கிக் கொள்ள மீண்டும் மீண்டும் முயல்கிறார்கள்" என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதற்கிடையே மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காகோலி கோஷ் தஸ்திதார் பேசுகையில், வந்தே மாதரம் இந்தியாவின் தேசியப் பாடல் மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்திற்கு உந்துசக்தி அளித்த மில்லியன் கணக்கான மக்களால் பாடப்பட்ட ஒரு பாரம்பரியச் சொத்து.
உதாரணமாக, சவர்க்கர் சிறையில் இருந்தபோது கருணை மனுக்களை எழுதி, தனக்கான விடுதலையைப் பெற்றார். ஆனால், அந்த நேரத்தில் அந்தமான் சிறையில் இருந்த 585 கைதிகளில் 398 வங்காளிகள், தங்களின் தனிப்பட்ட விடுதலையை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்களை அர்ப்பணித்தனர்.
இளம் வயதில் குதிராம் போஸ் தன் உயிரைத் தியாகம் செய்தபோது, இன்று உள்ள ஆளும் கட்சியின் மூதாதையர்கள் கருணை மனுக்களை எழுதுவதில் மும்முரமாக இருந்தனர்" என்று விமர்சித்தார்.
இந்த விவாதத்தை அரசு நடத்துவதற்கு மேற்கு வங்கத்தில் நடக்க உள்ள தேர்தலே காரணம் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்தார்.