செய்திகள்

பஞ்சாப்: லாரி, ஜீப் நேருக்குநேர் மோதிய விபத்தில் பத்துபேர் பலி

Published On 2016-05-22 14:42 IST   |   Update On 2016-05-22 14:42:00 IST
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சீக்கிய பொற்கோயிலுக்கு பக்தர்கள் சென்ற ஜீப் இன்று லாரி மீது மோதிய விபத்தில் ஆறு பெண்கள் உள்பட பத்துபேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டம், யாத்பூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 20 பேர் அம்மாநில தலைநகரான அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கிய பொற்கோயிலை தரிசிப்பதற்காக நேற்று ஒரு ஜீப்பில் புறப்பட்டுச் சென்றனர்.

அமிர்தசரஸ் நகரின் அருகாமையில் உள்ள மடேவால் பகுதி வழியாக இன்று அதிகாலை அந்த ஜீப் வேகமாக வந்தபோது ஒரு குறுகிய வளைவில் நின்றிருந்த லாரியின்மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆறு பெண்கள் உள்பட எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜீப்பின் முன்இருக்கையில் அமர்ந்திருந்த டிரைவர் மற்றும் இன்னொரு பயணியின் உடல் மிக மோசமாக நசுங்கியிருந்த நிலையில் கியாஸ் கட்டரின் உதவியால் ஜீப்பை வெட்டி அவர்களது உடல்கள் வெளியே எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த பத்துக்கும் அதிகமானோர் அமிர்தசரஸ் நகரில் உள்ள குரு நானக் தேவ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்ததையடுத்து, இந்த கோரச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

Similar News