தலா ரூ.40 லட்சம் சன்மானம் கொண்ட 2 மாவோயிஸ்டு உயர் தலைவர்கள் சுட்டுக் கொலை.. அமித் ஷா பாராட்டு
- இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
- பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரு முக்கிய மாவோயிஸ்ட் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில், அபூஜ்மாட் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றபோது அவர்கள் கொல்லப்பட்டனர்.
அவர்களின் உடல்களும், ஏகே-47 துப்பாக்கி, இன்சாஸ் துப்பாக்கி, வெடிபொருட்கள் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கொல்லப்பட்டவர்கள், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான ராஜு தாடா என்கிற கட்டா ராமச்சந்திர ரெட்டி மற்றும் கோசா தாடா என்கிற காதரி சத்யநாராயணா ரெட்டி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் தெலங்கானாவின் கரீம்நகரைச் சேர்ந்தவர்கள்.
சத்தீஷ்கரின் பஸ்தர் பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களுக்கு இவர்கள் மூளையாக இருந்துள்ளனர்.
இவர்கள் இருவர் மீதும் தலா ரூ.40 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புப் படையினரின் இந்த நடவடிக்கைக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரின் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் போரில் இது ஒரு முக்கிய வெற்றி என்று முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தெரிவித்தார்.