இந்தியா

சபரிமலையில் 15 லட்சம் டின் அரவணை இருப்பு வைக்கப்படும்: தேவஸ்தான தலைவர் தகவல்

Published On 2022-11-09 08:45 IST   |   Update On 2022-11-09 08:45:00 IST
  • மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
  • ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி டின் அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திருவனந்தபுரம் :

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பத்தனம்திட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பம், அரவணை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 2 கோடி டின் அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரவணை நிரப்பப்படும் டின்கள் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த டின்களை திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கேரளாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பான தொழிற்சாலை தொடங்குவது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்னதாக 15 லட்சம் டின் அரவணை தயார் நிலையில் இருப்பு வைக்கப்படும். அதேபோல் அப்பம் தயாரிக்கும் பணி வருகிற 11-ந் தேதி தொடங்க இருக்கிறது.

இதற்காக அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. சன்னிதானத்தில் 3 லட்சம் கிலோ சர்க்கரை இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக நிலக்கல் உள்பட 13 இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு மையங்கள் தொடங்கப்படும். இதுதவிர பாலக்காடு, கண்ணூரிலும் முன்பதிவு மையங்கள் சீசனுக்கு முன்னதாக தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News