நாட்டின் 10 சதவீதம் மக்கள் ராணுவத்தை கட்டுப்படுத்துகின்றனர்: ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு
- இந்தியாவின் 500 பெரிய நிறுவனங்களை எடுத்துப் பாருங்கள்.
- அதில் நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள்தான் இருப்பார்கள் என்றார்.
பாட்னா:
பீகார் சட்டசபை தேர்தலுக்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி இன்று குடும்பா என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
நாட்டில் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால் (உயர்ஜாதியினர்) ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது. உன்னிப்பாக கவனித்து பார்த்தால் இது தெரியும்.
நம் நாட்டில் தலித், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் என்று பார்த்தால் 90 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள 500 பெரிய நிறுவனங்களை எடுத்துப் பாருங்கள். அதில் பிற்படுத்தப்பட்டோர் அல்லது தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.
நாட்டின் 10 சதவீதமாக உள்ளவர்கள் (உயர் ஜாதியினர்)தான் இருப்பார்கள். அனைத்துப் பணிகளும் அவர்களுக்கு தான் செல்கிறது. அவர்கள்தான் ஆயுதப்படையை கட்டுப்படுத்துகின்றனர். உங்களால் மற்ற 90 சதவீத மக்கள் எங்கு உள்ளனர் என்பதை கண்டுபிடிக்க முடியாது.
நாட்டின் 90 சதவீத மக்கள் தொகைக்கு உரிய இடமளிக்க வேண்டும். அவர்கள் கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய இந்தியாவை நாங்கள் விரும்புகிறோம்.
காங்கிரஸ் எப்போதும் பிற்படுத்தப்பட்டவர்களுக்காகப் பாடுபட்டுள்ளது. இனியும் அதனை செய்வோம் என தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்தை பா.ஜ.க.வினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். ராகுல் காந்தி உயர்ஜாதியினரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.