செய்திகள்

கும்பகோணத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்

Published On 2019-04-15 04:57 GMT   |   Update On 2019-04-15 04:57 GMT
கும்பகோணத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

கும்பகோணம்:

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை அமைத்து 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை தொகுதியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கும்பகோணத்தை அடுத்த அண்ணலக்கிரஹாரம் மாத்தி கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி உஷா தலைமையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 44) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரது வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் அவர் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் எடுத்து செல்வது தெரியவந்தது. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தாசில்தார் நெடுஞ்செழியனிடம் ஒப்படைத்தனர்.

செல்வத்திடம் நடத்திய விசாரணையில் அவர் வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாகவும், தன்னிடம் கடன் பெறுபவர்களுக்கு பணத்தை கொடுக்க எடுத்து சென்றதாக கூறினார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாதததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தாசில்தார் மூலம் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. #LokSabhaElections2019

Tags:    

Similar News