செய்திகள்

நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டி கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும் - கமல்ஹாசன்

Published On 2019-04-09 12:12 IST   |   Update On 2019-04-09 12:12:00 IST
நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டி கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

கோவை:

மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் டாக்டர் மகேந்திரனை ஆதரித்து கமல்ஹாசன் உக்கடம், தேர் நிலை திடல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

என்னை பார்த்து என்ன சொல்வது என்று தி.மு.க.க்கு புரியவில்லை. என்னை பா.ஜனதாவின் ‘பி’ அணி என்று கூறுகின்றனர். அப்படி என்றால் பக்கத்து மாநிலத்தில் பினராயி விஜயனும் ‘பி’ அணி தான். இந்த கூட்டம் மாற்றத்திற்காகவும், அன்பிற்காகவும் என இரண்டும் வேண்டும் என்று வந்த கூட்டம். நானும் அப்படித்தான். தொடர்ச்சியாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக கோவையும், பொள்ளாச்சியும் மாறி வருவது வருத்தத்தை அளிக்கிறது. அதற்கு காரணம் மெத்தனமான அரசு தான். இத்தகைய கொடூரம் நடந்து விட்டதற்கு மிகவும் வருந்துகிறேன் என்று முதல்-அமைச்சர் இதுவரை சொல்லவில்லை. வருத்தம் சொல்லவேண்டிய உணர்வு கூட இல்லாதவராகத் தான் அவர் உள்ளார்.

சூறையாடி கற்பழித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்ன தண்டனை? தண்டனையை முடிவு செய்யும் நாள் ஏப்ரல் 18. நாங்கள் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள், நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம்.

நாங்கள் மிகவும் நேர்மையானவர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களின் வீட்டில் எல்லாம் மூட்டை, மூட்டையாக பணம் சிக்கி இருப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் என்னை விட பெரிய நடிகர்கள். எனக்கும் நடிக்க தெரியும். அதனால் என்னிடம் பலிக்காது. இனி தமிழக மக்களிடமும் அது பலிக்காது. நேர்மையற்ற அரசியல்வாதிகளை தட்டிக்கேட்பவர்களாக நீங்கள் மாற வேண்டும். அதை மாற்ற வேண்டியது எங்கள் கடமை. அப்படி செய்யும்போது தமிழகம் முன்னேற்றத்தை நகரும் தேராக இருக்க வேண்டும். அது நகரும். அதை நகர்த்த வேண்டியது உங்கள் பொறுப்பு.

புதிய தமிழ்நாட்டை உருவாக்கும் பொறுப்பில் நாம் இருக்கிறோம். நாம் வாழ்ந்த வாழ்க்கையை நம் சந்ததியினர் வாழாமல் இருக்க வேண்டும். காலத்தே பயிர் செய்ய வேண்டும். இது தான் அந்த காலம். அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என்று தாமதப்படுத்தி விடாதீர்கள். அதற்கு வழிவிடாமல் நல்ல எதிர்காலத்துக்கு உங்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்ற டார்ச்லைட் சின்னத்திற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.  #KamalHaasan #MakkalNeedhiMaiam

Tags:    

Similar News