செய்திகள்

மத்தியில் மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்த நேரம் வந்து விட்டது - மு.க.ஸ்டாலின் பிரசாரம்

Published On 2019-03-29 07:18 GMT   |   Update On 2019-03-29 07:18 GMT
மத்தியில் தற்போது இருக்கும் மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் நேரம் வந்து விட்டது என சிவகங்கை பிரசாரப் பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
சிவகங்கை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கையில் உள்ள அரண்மனை வாசலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:

இந்த சிவகங்கை தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடவிருக்கும் கார்த்தி சிதம்பரத்திற்கு வாரிசு அடிப்படையில் வாய்ப்பளிக்கப்படவில்லை, தகுதி  அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டார்.

ஆளுங்கட்சியின் துணையோடு பாஜக சார்பில் நிற்கும் எச். ராஜாவை பற்றி நான் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை. தமிழகத்திலேயே, ஏன் இந்தியாவிலே இது போன்ற கடைந்தெடுத்தவரை பார்த்ததில்லை. வாய்க்கு வந்ததையெல்லாம் கூறுவது. பொய்களையே பேசுவது இது தான் ராஜாவின் பணி.  மத்தியில் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எச். ராஜா பாராளுமன்றத்திற்கு போனால் சிவகங்கை தொகுதிக்கே அவமானம். அவர் மோசமான அரசியல்வாதி.



இதன் காரணமாகவே காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியிருக்கக்கூடிய கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கூறுகிறேன். பெரியார், அறிஞர் அண்ணா, மற்றும் திராவிட இயக்கத்தினை மிகவும் கொச்சைப்படுத்தி பேசுகிற ராஜாவை விடுத்து, நீங்கள் அனைவரும் கார்த்திக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

பிரதமர் மோடியின் இந்த ஆட்சியில்,  பாஜக கார்பரேட் நிறுவனங்களுக்கு வழங்காத சலுகைகளே இல்லை. எனவே பாரதீய  ஜனதா என அழைக்காமல் கார்ப்பரேட் ஜனதா என்றே கூறுங்கள். வெளிநாட்டில் இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்திய மக்களின் பேரில் வங்கிகளில் வைப்புத் தொகையாக ரூ.15 லட்சம் போடுவேன் என கூறினார். யாருக்கேனும்  போட்டுள்ளாரா? அப்படி போட்டிருந்தால் சொல்லுங்கள் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

பிரதமர் மோடி வாக்குறுதிகளை வாரி வாரி வழங்குவார். ஆனால் செயல் ஒன்றும் இருக்காது. பாஜகவிற்கு எதிராக யாரும் பேசினால் தேச துரோகி என கூறுகிறார்களே ,இது முறையா? 5 ஆண்டுகளுக்கு முன் மதச்சார்பற்ற இந்தியா உருவாகும் என கூறினார்களே, அப்படி செய்தார்களா? நாற்காலி தான் இவர்களது நோக்கம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.  #MKStalin #DMK #LoksabhaElections2019

 
Tags:    

Similar News