செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் காய்கறி வியாபாரியிடம் ரூ.6 லட்சம் பறிமுதல் - பறக்கும் படை நடவடிக்கை

Published On 2019-03-18 08:05 GMT   |   Update On 2019-03-18 08:05 GMT
மேட்டுப்பாளையத்தில் காய்கறி வியாபாரியிடம் ரூ. 6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

மேட்டுப்பாளையம்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை 10.50 மணிக்கு மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தின் சீட்டின் கீழ் பகுதியில் ஒரு கைப்பையில் ரூ. 5 லட்சத்து 98 ஆயிரம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

அவரிடம் விசாரித்த போது அவரது பெயர் அப்துல் ஹக்கீம் என்பது தெரிய வந்தது. அவர் மேட்டுப்பாளையம் -அன்னூர் சாலையில் புதிய மார்க்கெட்டில் காய்கறி மண்டி நடத்தி வருவதாக தெரிவித்தார்.

இந்த பணத்தை ஊட்டி, கர்நாடக மாநிலத்தில் இருந்து மண்டிக்கு காய்கறி சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொண்டு செல்வதாக கூறினார். ஆனால் நிலையான கண்காணிப்பு குழுவினர் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணம் வேண்டும். இது தொடர்பாக நீங்கள் தாசில்தார் அலுவலகத்தில் கூறுங்கள் என பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து அப்துல் ஹக்கீம் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் வந்தார். அங்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தாசில்தாருமான புனிதாவிடம் காய்கறி மண்டிக்கு காய்கறி சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொடுக்க தான் இந்த பணத்தை கொண்டு செல்கிறேன். பணத்தை கொடுக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.இதற்கான சில ரசீதுகளையும் காண்பித்தார். அவரிடம் அதிகாரிகள் தேர்தல் நன்னடத்தை விதிப்படி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லக் கூடாது என்பதால் பறிமுதல் செய்ததாக தெரிவித்தனர்.

இந்த பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழுவிடம் ஒப்படைத்து விடுவோம். அங்கு உரிய ஆவணங்களை நீங்கள் காண்பித்து பணத்தை பெற்று கொள்ளலாம் என கூறிவிட்டனர். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்படட பணம் கோவையில் உள்ள கருவூலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  #LSPolls

Tags:    

Similar News