செய்திகள்
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் கமல்ஹாசன் நேர்காணல் நடத்தினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 20-ந்தேதி அறிவிப்பு

Published On 2019-03-18 05:34 GMT   |   Update On 2019-03-18 07:00 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் 20-ந்தேதி வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
சென்னை:

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் இறங்குகிறது.

பாராளுமன்ற தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 18 வேட்பாளர்களுக்கான நேர்காணல் நேற்றுவரை நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க. என 2 பிரதான கூட்டணிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடுபவர்களின் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இன்று காலை 9 மணிக்கு கமல்ஹாசன் தலைமையில் தேர்தல் பணிக்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டை தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் 20-ந்தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-



மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் தேர்வில் கமல்ஹாசன் தீவிரமாக இருக்கிறார். தகுதியான வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும். அவர் யார் என்று சொந்த தொகுதியிலேயே கேட்கும் அளவுக்கு பிரபலம் இல்லாதவராக கூட இருக்கட்டும். ஆனால் தகுதியும் நேர்மையும் தான் முக்கியம் என்று உறுதியாக இருக்கிறார். அதனால் தான் நேர்காணலில் அவரே நேரடியாக பங்கேற்றார். அதுவும் காலையில் இருந்து நள்ளிரவு வரை நேர்காணல் செய்தார்.

மற்ற கட்சிகளில் நேர்காணல் செய்பவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்களாகத்தான் இருப்பார்கள். அதிலும் முக்கிய பொறுப்பாளர்கள்தான் நேர்காணல் குழுவில் இடம் பெற்றிருப்பார்கள். ஆனால் கமல் கட்சியில் ஒரு பக்கம் கட்சிக்காரர்கள் இருந்தாலும் மற்றொரு பக்கம் பத்திரிகையாளர்களும் இலக்கியவாதிகளும் சமூக செயல்பாட்டாளர்களும் இருந்தனர்.

பொதுவாக ஒரு கட்சியின் நேர்காணலில் முதல் கேள்வியே “எவ்வளவு பணம் செலவு பண்ணுவீங்க?” என்பதுதான் இருக்கும். ஆனால் கமல் கட்சியில் அப்படி இல்லை. “மக்களுக்கான நற்பணிகள் இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள், உங்கள் தொகுதி பிரச்சனைகளுக்காக ஏதாவது போராட்டம் நடத்தி இருக்கிறீர்களா?” இதுதான் முதல் கேள்வியே. இப்படித்தான் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்கப்பட்டது.

வேட்பாளர்கள் பதில்கள் சொல்ல சொல்ல, அதை அங்கு இருக்கும் குழுவினர் உடனடியாக குறித்து வைத்து கொண்டார்கள். கமலும் கையில் ஒரு பேனா வைத்து கொண்டு அதை குறிப்பெடுத்தார்.

இது நேர்காணல் போலவே இல்லை. ஏதோ ஒன்றாக உட்கார்ந்து கலந்துரையாடுவதை போல இருந்தது. வேட்பாளர்கள் தேர்வில் இது புதுமை.’

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
Tags:    

Similar News