அசோக் துப்பாக்கியுடன் முதல் நாளில் வெளியிட்ட மிரட்டல் வீடியோ காட்சிகளையும், பின்னர் போலீசாரிடம் கதறும் காட்சியையும் காணலாம்.
நானும் ரவுடிதான்.. பஞ்ச் வசனம் பேசி மிரட்டல்... போலீசாரின் கவனிப்புக்கு பிறகு கையெடுத்து கும்பிட்டு கதறிய வாலிபர்
- அசோக்கை உடனடியாக கைது செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார்.
- அச்சுறுத்தும் வகையில் பேசமாட்டேன் என அசோக்கை கதற வைத்து போலீசார் அந்த வீடியோவை பதிவு செய்து வெளியிட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவை சேர்ந்தவர் அசோக் (வயது 19). இவர் மீது மகாராஜகடை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 11-ந்தேதி அன்று பழையபேட்டை லட்சுமி நாராயணன் கோவில் அருகே சென்ற போது அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (24) என்பவரை அசோக் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து, வினோத்குமார் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகாரளித்தார். இந்நிலையில் அசோக் சமூக வலைதளங்களில் கஞ்சா புகைப்பது, நானும் ரவுடிதான் என பஞ்ச் வசனம் பேசி காட்டுவது, போலீசாரை மிரட்டுவது போன்ற காட்சிகளை வெளியிட்டதுடன் அரசு பஸ்சை தீ வைத்து கொளுத்துவேன் எனவும் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து அசோக்கை உடனடியாக கைது செய்யுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் பழையபேட்டை பகுதியில் பதுங்கியிருந்த அசோக்கை கைது செய்தார்.
அவரை உரிய முறையில் கவனித்த போலீசார் இனிமேல் இதுபோல் தவறு செய்யமாட்டேன். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசமாட்டேன் என அசோக்கை கதற வைத்து அந்த வீடியோவையும் பதிவு செய்து வெளியிட்டனர்.
முதல் நாளில் பந்தாவாக போலீசை சீண்டி பதிவு வெளியிட்டவர் தற்போது போலீசாரின் கவனிப்புக்கு பிறகு கதறல் வீடியோ வெளியிட்டது, கிருஷ்ணகிரியில் ரவுடியிசம் செய்யும் ஆசாமிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.