உள்ளூர் செய்திகள்

மதுபோதை தகராறில் வாலிபர் அடித்துக் கொலை

Published On 2025-01-16 14:24 IST   |   Update On 2025-01-16 14:24:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது.
  • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

வண்டலூர்:

உத்திரமேரூர் அடுத்த களியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சரவணன் (வயது 20). நேற்று இரவு சரவணன் நண்பர்களுடன் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் மதுகுடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் சரவணனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சரணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே உடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

தகவல் அறிந்ததும் மறைமலை நகர் போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்த போது பரபரப்பு தகவல் கிடைத்தது. சரவணன் மற்றொரு நண்பருக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக மதுகுடித்த போது சரவணனை உடன் இருந்த நண்பர்கள் கேட்டு உள்ளனர்.

அப்போது ஏற்பட்ட மோதலில் சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News