காதல் மனைவியை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்ற வாலிபர்
- மனைவி மீது சந்தேகம் அடைந்த ரஞ்சித் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
- கவுசல்யாவின் தாயார் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா அனுப்பத்தூர் ரோடு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் ரஞ்சித் (வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் எதிர் வீட்டில் உள்ள நெடுஞ்செழியன் என்பவரது மகள் கவுசல்யா (23) என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கவுசல்யா செய்யாறு சிப்காட் ஷூ தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ரஞ்சித்துக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்தார். அப்போது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனர்.
இதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தம்பதியிடைய தகராறு ஏற்பட்டது. அப்போது அனக்காவூர் போலீசில் கவுசல்யா புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ரஞ்சித்தை எச்சரித்து ஒழுங்காக குடும்பம் நடத்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மனைவி மீது சந்தேகம் அடைந்த ரஞ்சித் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஆத்திரமடைந்த ரஞ்சித் கவுசல்யாவின் கழுத்தை அவரது தாலி கயிற்றாலும், துப்பட்டாவாலும் இறுக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தனது 1½ வயது மகன் கபிலேஷை தூக்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் கன்னியப்பன், மனோகர் ஆகியோர் விரைந்து வந்து கவுசல்யாவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கவுசல்யாவின் தாயார் செல்வராணி கொடுத்த புகாரின் பேரில் அனக்காவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.