களக்காட்டில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
- குழந்தையை பார்ப்பதற்காக ஜெபராஜ் களக்காட்டிற்கு வந்தார்.
- விசாரணையில் டேனியல் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.
களக்காடு:
சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர், கீழவடக்கு தெருவை சேர்ந்தவர் சகரியா மைக்கில் ஜெபராஜ் (வயது28). விவசாயி. இவரது மனைவிக்கு களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. நேற்று அவர் குழந்தையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் களக்காட்டிற்கு வந்தார். மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவர் மருத்துவமனைக்கு சென்றார். சிறிது நேரத்திற்கு பின் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நேச மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் மேலபத்தை, கருப்பன்தோப்பு பகுதியை சேர்ந்த டேனியல் (27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.