உள்ளூர் செய்திகள்

கோவையில் உலக யோகா தினத்தையொட்டி போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி

Published On 2023-06-21 14:40 IST   |   Update On 2023-06-21 14:40:00 IST
  • கோவை மாநகர போலீசாருக்கு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
  • ஈஷா யோகா மையத்தில் 100-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

கோவை,

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கோவையில் பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

கோவை மாநகர போலீசாருக்கு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், நடந்த இந்த யோகா பயிற்சியில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக யோகா தினத்தை முன்னிட்டு உலக சேவா மையம் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் இணைந்து போலீசாருக்கான சிறப்பு யோகா பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.

இதில் 600-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், போலீசார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த யோகா தினத்தில் எல்லோரும் சேர்ந்து யோகா செய்தது மட்டும் அல்லாமல் யோகா பயிற்சிகள் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

முக்கியமாக மூச்சுப்பயிற்சி, தியான பயிற்சி செய்வதன் மூலம் போலீஸ் துறையில் பணியின் போது ஏற்படும் மன அழுத்தங்களை, உணர்வுகளை சீர்படுத்துவதற்கும் முக்கியமாக நமது மூச்சை சீர்படுத்துவதன் மூலம் எப்படி பயன்பெற முடியும் என்பதும் எடுத்து சொல்லப்பட்டது. போலீசாருக்கு பணியின் போது ஏற்பட்டும் மன அழுத்தங்களை மூச்சுப்பயிற்சி மூலம் எப்படி சரி செய்து என்பது குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டீன் நிர்மலா தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இதேபோல கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

ஈஷா யோகா மையத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆதியோகி சிலை முன்பு 100-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News