சோழவரம் அருகே 100 நாள் வேலை கேட்டு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் போராட்டம்
- ஞாயிறு காரனோடை சாலை கண்ணியம் பாளையத்தில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- போராட்டம் காரணமாக 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பொன்னேரி:
சோழவரம் ஒன்றியம் ஞாயிறு ஊராட்சியில் அட்டப்பள்ளம், புது குப்பம் ஜெயராமபுரம், ஞாயிறு, பசுவன் பாளையம், கண்ணியம் பாளையம் தாண்டவராயன் பாளையம் ஆகிய 7 கிராமங்கள் உள்ளன.
இதில் பசுவன் பாளையம், கன்னியம் பாளையம், தாண்டவராயன் பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 100 நாள் கார்டு உள்ள பெண்களுக்கு கடந்த 4 மாதமாக 100 நாள் வேலை இல்லாததால் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் மனு அளித்தனர். நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஞாயிறு காரனோடை சாலை கண்ணியம் பாளையத்தில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, 57 ஞாயிறு பிராட்வே மாநகரப் பேருந்தை சிறைபிடித்து ஞாயிறு கிராமத்திற்குள் செல்லாமல் சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்து வந்த சோழவரம் காவல்துறையினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அமிழ்த மன்னன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளான 100 நாள் வேலை அடிப்படை வசதிகளான சாலை சீரமைப்பு, ரேஷன் கடை, தெருவிளக்கு, குடிநீர் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஞாயிறு ஊராட்சி துணைத்தலைவர் ஜனார்த்தனன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.